0
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிப்பு, வாடகை காரில் பெண் கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து கொந்தளிப்பை ஏற்படுத்தின. இப்போது வித்தியாசமாக ஆட்டோ டிரைவர் ஒருவர் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பெண் பற்றிய வழக்கு போலீசுக்கு வந்துள்ளது.
தெற்கு டெல்லியின் சாகெட் பகுதியில் ரேணு லால்வானி (வயது 32) என்ற பெண், தனது ஆப்பிரிக்க தோழியுடன் அர்ஜுன் நகரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக உமேஷ் பிரசாத் (41) என்பவரின் ஆட்டோவில் ஏறினார். வீட்டுக்கு வந்ததும் ஆட்டோ டிரைவர் உமேஷை தனது பைகளை வீட்டில் கொண்டுவந்து வைக்கும்படி கூறினார். அவரும் பைகளை எடுத்துக் கொண்டு 2–வது மாடியில் உள்ள அவரது வீட்டில் கொண்டு சென்று வைத்தார்.
பாலியல் வன்முறை
அங்கு உமேஷுக்கு ஆட்டோ வாடகையை கொடுத்த ரேணு தண்ணீர் கொடுத்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி கூறினார். சிறிது நேரத்தில் கதவை உள்புறம் பூட்டிய ரேணு, மது குடிக்கும்படி அவரிடம் கூறினார். ஆனால் உமேஷ் மறுத்துவிட்டார். தன்னுடன் உறவு கொள்ளும்படி உமேஷை ரேணு வற்புறுத்தினார். அதற்கும் உமேஷ் மறுத்தார். உடனே ரேணு உமேஷின் செல்போன், மணிபர்ஸ் ஆகியவைகளை பறித்துக் கொண்டதுடன், ஆடைகளை அவிழ்த்தும், அவருக்கு முத்தம் கொடுத்தும் பாலியல்ரீதியாக தாக்குதல்களை தொடுத்தார்.
இந்த சம்பவங்கள் அனைத்தையும் ரேணுவின் ஆப்பிரிக்க தோழி ஹிதிஜா வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் பெண்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்த நேரத்தில் உமேஷ் அங்கிருந்து பால்கனி வழியாக முதல்மாடி பால்கனிக்கு குதித்து தப்பினார். இதில் அவரது கால்களில் முறிவு ஏற்பட்டது. அந்த பகுதியில் இருந்தவர்களின் உதவியுடன் உமேஷ் இதுபற்றி போலீசில் புகார் செய்தார்.
பெண் கைது
போலீசார் ரேணு லால்வானியை கைது செய்து, பாலியல் வன்முறை, வழிப்பறி, கடத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவரது தோழி ஹிதிஜா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் இதுபோல பல ஆட்டோ டிரைவர்களிடம் நடந்து கொண்டது தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்து 4 ஆட்டோ டிரைவர்களின் ‘பேட்ஜ்’கள், லைசென்ஸ் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் விசாரணை நடந்துவருகிறது.

Post a Comment Blogger

 
Top