0
இலங்கை– 
இந்தியாவின் காலடியில் கண்ணீர்த் துளி போல் இருக்கும் அழகான குட்டி தேசம்.

பூகோள ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான தீவு நாடு. சமூக, கலாசார பழக்க வழக்கங்கள் மற்றும் உறவிலும் இந்தியாவுக்கு ஒரு சின்னத்தம்பி. 

தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் அங்கு மண்ணின் மைந்தர்களாக வாழ்கிறார்கள். தென் மாவட்டங்களில் இலங்கை தமிழர்களின் உறவுகள் அதிகம்.

 உறவு ரீதியாகவும், வணிக ரீதியாகவும் தமிழர்கள் இங்கிருந்து இலங்கைக்கு செல்வதும், அங்கிருந்து இங்கே வருவதும் தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் பழக்கம். 

இந்த போக்குவரத்து கடந்த காலங்களில் படகுகள் மூலமாகவே நடைபெற்று வந்தது. அதன்பின்னர் கப்பல் மூலமாக சென்று வருவதும், சமீபத்திய ஆண்டுகளில் விமானம் மூலமாக சென்று வருவதுமாக தொடர்கிறது. 

ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது சென்னைக்கும் இலங்கைக்கும் இடையே ‘போட் மெயில்’ என்ற ரெயில் போக்குவரத்து இருந்தது. அதாவது ‘போட் மெயில்’ என்ற பெயர் கொண்ட பயணிகள் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முனை வரை செல்லும்.

அங்குள்ள ரெயில் நிலையத்தில் இறங்கும் பயணிகளை சிறிய கப்பலில் ஏற்றி இலங்கையில் உள்ள தலைமன்னார் வரை அழைத்துச் செல்வார்கள். தலைமன்னார் போய் சேர்ந்ததும் அங்கிருந்து கொழும்பு நகருக்கும் பிற பகுதிகளுக்கும் ரெயில் அல்லது பஸ்கள் மூலம் செல்வார்கள்.

இதேபோல் அங்கிருந்து வருபவர்களும் தலைமன்னாரில் இருந்து படகில் தனுஷ்கோடி வந்து, பின்னர் ‘போட் மெயில்’ ரெயிலில் ஏறி வருவார்கள்.

ரெயில் மற்றும் கப்பலில் மேற்கொள்ளப்படும் இந்த பயணத்துக்கு ஒரே கட்டணமாக சேர்த்து வசூலிப்பார்கள்.

ஆனால் பின்னர் இந்த போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

‘‘சிங்கள தீவுனுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுருத்தி வீதி சமைப்போம்’’ என்று பாடினார் பாரதியார். அந்த மகாகவியின் கனவு நனவாகும் சூழ்நிலை தற்போது உருவாகி இருக்கிறது.

ராமேசுவரம் தீவில் உள்ள தனுஷ்கோடியில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு பாலம் அமைப்பது பற்றிய பேச்சு தற்போது எழுந்துள்ளது. சமீபத்தில் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் தலைநகர் அகர்தலாவுக்கும், வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கும் இடையே பஸ் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பூடான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளை இந்தியாவுடன் சாலை வழியாக இணைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இந்தியாவை சுற்றியுள்ள சார்க் நாடுகளை, சாலை மார்க்கமாக திறம்பட இணைத்தால், சமூக, பொருளாதார ரீதியில் இந்தியாவும் சம்பந்தப்பட்ட மற்ற நாடுகளும் பெரும் அளவில் பயன் அடைய முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார்.

மியான்மர் வழியாக தாய்லாந்தை சாலை மார்க்கமாக இந்தியாவுடன் இணைக்கும் யோசனையும் உள்ளது.

 இதில் இலங்கை தவிர சீனா, மியான்மர், பூடான் உள்ளிட்ட நாடுகளுடன் தரைவழி இணைப்பு இருப்பதால் அவற்றை சாலை மார்க்கமாக இணைப்பதில் சிரமம் இருக்காது. ஆனால் இலங்கையை இணைப்பதில் தான் பிரச்சினை உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பாக் ஜலசந்தி கடல்வழி நீரிணை உள்ளது. எனவே பாலம் அமைப்பதன் மூலமே இரு நாடுகளையும் தரை மார்க்கமாக இணைக்க முடியும்.

ராமேசுவரம் தீவுக்கும் இலங்கையின் மன்னார் தீவு பகுதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியின் நீளம் 23 கிலோ மீட்டர் ஆகும். எனவே இந்த இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் கடலில் பாலம் அமைக்கலாம் என்று இந்தியா கருதுகிறது.

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் பாக் ஜலசந்தியில் பாலம் அமைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சமீபத்தில் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். இதே கருத்தை அந்த இலாகாவின் ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் தெரிவித்து உள்ளார்.



வாகனங்கள் செல்ல கடலில் சாலை பாலம் அமைக்கும் யோசனை உள்ளது. மேலும், கப்பல்கள் செல்வதற்கு வசதியாக சாலை பாலத்தின் ஒரு பகுதியை கடலுக்கு அடியில் அமைப்பது பற்றிய யோசனையும் இருப்பதாக கூறப்படுகிறது.  அத்துடன் ரெயில் பாலம் அமைக்கும் திட்டமும் ஆய்வில் உள்ளதாக தெரிகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யவும், அதைத்தொடர்ந்து திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி உதவியும் கோரி ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இந்திய அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்றி முடிக்க தற்போதைய மதிப்பீட்டின் படி ரூ.23 ஆயிரம் கோடி செலவாகும் என்று நிதின் கட்காரி தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாக் ஜலசந்தி அதிக ஆழம் இல்லாத கடல் பகுதி ஆகும். இந்த பகுதியில் தான் சேது பாலமும் உள்ளதாக கருதப்படுகிறது. சரித்திரத்தின் அடையாளமாகவும், இந்துக்களின் நம்பிக்கையாகவும் விளங்கும் அந்த சேது பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய பாலத்தை நிர்மாணிக்க மத்திய அரசு விரும்புகிறது.

கடலில் பாலம் அமைத்து இரு நாடுகளை இணைப்பது சவாலான பணிதான் என்ற போதிலும், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் இது ஒன்றும் புதிதான காரியம் அல்ல. ஏற்கனவே சில நாடுகள் இதுபோல் இணைக்கப்பட்டு உள்ளன.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் மலேசியாவும் அதன் அண்டை நாடான சிங்கப்பூரும் கடல் வழியாக அமைக்கப்பட்டுள்ள சாலை பாலத்தின் மூலம் இணைக்கப்பட்டு உள்ளன. இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் ஏற்கனவே ஒரு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலத்தில் போக்குவரத்து அதிகமானதால், வாகன நெரிசலை சமாளிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரண்டாவதாக ஒரு பாலம் அமைக்கப்பட்டது. கடலில் தூண்கள் அமைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலம் 1,920 மீட்டர் நீளம் கொண்டது. 1998–ம் ஆண்டு ஜனவரி மாதம் 2–ந்தேதி இந்த பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. 

கடலுக்கு நடுவே பாலம் அமைத்து இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் மத்திய அரசின் இந்த மாபெரும் திட்டம் குறித்து அரசியல் கட்சிகள் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இலங்கை அரசும் இன்னும் வாய் திறக்கவில்லை.

என்றாலும் காலம் கைகூடினால் எதுவுமே சாத்தியம்தான்.

ஆங்கிலேய அரசின் முயற்சி 

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது, இலங்கையும் அவர்களுடைய ஆளுகையின் கீழ்தான் இருந்தது. இலங்கையில் உள்ள தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஏராளமான தமிழர்கள் வேலைபார்த்தார்கள். கூடுதல் தொழிலாளர்கள் தேவைப்பட்டதால் தமிழ்நாட்டில் இருந்து மேலும் ஆட்களை இலங்கைக்கு அழைத்துச் செல்ல ஆங்கிலேய அரசு விரும்பியது. 

இதற்காக தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே கடலில் 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாலம் அமைக்க ஆங்கிலேய அரசு விரும்பி அதற்கான பூர்வாங்க பணிகளில் ஈடுபட்டது. 

 சென்னையைச் சேர்ந்த ரெயில்வே என்ஜினீயர் இந்த திட்டம் பற்றி 1894–ம் ஆண்டில் ஆய்வு செய்ததாக மொராதுவா பல்கலைக்கழகத்தின் நகரம் மற்றும் திட்ட அமைப்பு துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் வில்லி மெண்டிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தொழில்நுட்ப ரீதியிலான சாத்தியக்கூறுகள் மற்றும் செலவு பற்றிய அறிக்கையை சென்னை ரெயில்வே தயாரித்தது. அதன்பின்னர் 1913–ம் ஆண்டுக்குள் ராமநாதபுரம் மாவட்டத்தின் முனையில் உள்ள மண்டபத்தில் இருந்து பாம்பன் தீவுக்கு ரெயில் பாதை அமைக்கப்பட்டு, அந்த தீவு இந்தியாவின் பிரதான நிலப்பகுதியுடன் போக்குவரத்துக்கு இணைக்கப்பட்டது. 

அந்த ரெயில் பாதை பாம்பன் தீவில் தனுஷ்கோடி வரை போடப்பட்டது. (1964–ம் ஆண்டு டிசம்பர் 22–ந்தேதி ஏற்பட்ட பெரும் புயல்–மழையில் அந்த ரெயில் நிலையமும் தனுஷ்கோடியும் அழிந்து வனாந்தரமானது தனி சோகக்கதை)

இதேபோல் இலங்கையின் வடமேற்கு பகுதியில் தலைமன்னாரில் இருந்து மன்னார் வரை ஆங்கிலேய அரசு ரெயில் பாதை அமைத்தது. அந்த பாதையில் முதன் முதலாக 1914–ம் ஆண்டில் ரெயில் இயக்கப்பட்டது.

இந்தியாவின் முனைப்பகுதியில் உள்ள தனுஷ்கோடி வரையிலும், இலங்கையின் முனைப்பகுதியில் உள்ள மன்னார் வரையிலும் ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு தயாராகிவிட்ட நிலையில், அந்த தனுஷ்கோடியையும் மன்னாரையும் இணைப்பதற்காக பாக் ஜலசந்தியில் 23 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடலில் பாலம் கட்டி ரெயில் பாதை அமைக்க வேண்டியதுதான் பாக்கி.

அந்த சமயத்தில் இலங்கையைச் சேர்ந்த என்ஜினீயர் ஒருவர், இலங்கையில் மன்னார் வரை அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு இருப்பதையும், ஆனால் இந்தியாவில் தனுஷ்கோடி வரை மீட்டர் கேஜ் பாதை அமைக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி, அளவில் வேறுபட்ட இந்த இரு பாதைகளையும் இணைக்க, கடலுக்கு நடுவில் எத்தகைய பாதையை அமைப்பது என்பது பற்றி கேள்வி எழுப்பினார்.

இந்த பிரச்சினை உள்ளிட்ட வேறு சில விவகாரங்கள் காரணமாகவும், உலகப்போர் மும்முரமானதாலும், கடலில் ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை ஆங்கிலேய அரசு கிடப்பில் போட்டது. அதன்பிறகு இந்தியாவில் விடுதலை போராட்டமும் தீவிரம் அடைந்தது. சுதந்திர போராட்டம், உலகப்போர் ஆகியவற்றால் ஏற்பட்ட நெருக்கடிகளின் காரணமாக அந்த திட்டத்தை ஆங்கிலேய அரசால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.

அதன்பிறகு 2002–2004–ம் ஆண்டு காலகட்டத்தில் இந்த திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்கான முயற்சியை இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே தொடங்கினார். அனுமன் பாலம் என்ற பெயரில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நான்கு வழிச்சாலை பாலமும், அதன் அருகில் ஒருவழிப்பாதையாக ரெயில் பாதையும் அமைக்க இலங்கை விரும்புவதாகவும் இதற்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த திட்டத்துக்கு 654 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4 ஆயிரத்து 250 கோடி) செலவாகும் என்று இலங்கை முதலீட்டு வாரியம் மதிப்பீடு செய்து இருந்தது.

இந்த திட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய பொறியாளர்கள் ஆர்வம் காட்டியதாகவும், இது தொடர்பாக 2002–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கொழும்பு நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், ஆனால் பாலம் கட்டுவதற்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு கொண்டிருந்ததால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும் வில்லி மெண்டிஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.



‘இந்தியா எங்களிடம் ஆலோசிக்கவில்லை’
–இலங்கை மந்திரி அஜித் பெரைரா


இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைக்கும் இந்திய அரசின் யோசனை குறித்து, அந்த நாடு இதுவரை பகிரங்கமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

இதுபற்றி இலங்கை வெளியுறவு துணை மந்திரி அஜித் பெரைராவிடம் சீன செய்தி நிறுவனம் கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:–

இரு நாடுகளுக்கும் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் இலங்கைக்கு பாலம் அமைப்பது பற்றி இந்திய அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது தொடர்பாக இலங்கை அரசுடன் ஆலோசனைகள் எதுவும் நடத்தப்படவில்லை. சமீபத்தில் இலங்கை வந்திருந்த இந்திய பிரதமரோ அல்லது வெளியுறவு மந்திரியோ இதுகுறித்து இலங்கை அரசுடன் எதுவும் பேசவில்லை. யாரோ இந்த யோசனையை தெரிவித்து இருக்கிறார்கள்; மற்றபடி ஒன்றும் இல்லை.

பாலம் அமைக்கும் யோசனை இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டால் அதுபற்றி இந்திய அரசுடன் ஆலோசிக்கும் முன், சமூக–பொருளாதார விளைவுகளை கருத்தில் கொண்டு அதில் உள்ள சாதக–பாதகங்கள் பற்றி மிகவும் கவனத்துடன் பரிசீலிப்போம். இது மிகப்பெரிய திட்டம் என்பதால் மிகவும் கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அஜித் பெரைரா கூறினார்.

Post a Comment Blogger

 
Top